2026 உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு ஈரானுக்கு அநியாயமாக மறுக்கப்பட்டதாகக் கூறி, ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக 1 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஈரானிய-அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான காவே லொத்ஃபுல்லா அஃப்ராஸியாபி (Kaveh Lotfollah Afrasiabi) என்பவரால் போஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் ஈரானிய அணியை ஆதரித்த மில்லியன் கணக்கான ரசிகர்களின் சார்பில் இந்த கூட்டு நடவடிக்கை (Class-action) வழக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஈரான் வீரர் சோஜா கலில்சாதே (Shoja Khalilzadeh) அடித்த வெற்றி இலக்கு (Goal), நடுவர்களால் ‘ஆஃப்சைடு’ (Offside) என அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
இந்த ‘வீடியோ உதவி நடுவர்’ (VAR) முடிவு, ஈரான் அணியின் வெற்றியைத் தடுத்து, அவர்களைத் தொடரிலிருந்து வெளியேற்றுவதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொடர் முழுவதும் ஈரான் அணிக்கு எதிராக ஃபிஃபா பாகுபாடு காட்டியதாகவும், நியாயமான முறையில் நடத்தத் தவறியதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த வழக்குத் தொடர்பாக சர்வதேச காற்பந்துச் சம்மேளனம் (FIFA) இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

