

தம்புள்ளையில் புதன்கிழமை நடைபெற்ற முக்கோண ‘A’ அணி ஒருநாள் தொடரின் முக்கிய போட்டியில், ஆப்கானிஸ்தான் ‘A’ அணியை 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ‘A’ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ‘A’ அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது.
320 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ‘A’ அணி, ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 157 ஓட்டங்களுடன் பலமான நிலையில் இருந்தது.
எனினும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
ஆப்கானிஸ்தான் அணி கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 61 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து, 36.5 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்தத் தொடரின் முந்தைய போட்டியில் இலங்கை ‘A’ அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்திருந்த இந்தியா ‘A’ அணிக்கு, இந்த அதிரடி வெற்றி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்தியா ‘A’ அணியின் நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate) கணிசமாக உயர்ந்துள்ள அதேவேளை, ஆப்கானிஸ்தான் ‘A’ அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு தற்பொழுது ஊசலாட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

