வெளிப்படைத்தன்மையான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற “Forward Faster Now” என்ற ஆசிய-பசிபிக் பிராந்திய முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை சவாலான காலத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் நாடு 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து தனிநபர் வருமானம் 5,000 டொலர்களைத் தாண்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வெறுமனே இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், ஊழியர்களுக்குச் சரியான சம்பளம், தொழிற்பயிற்சி, சரியான வரி செலுத்துதல் மற்றும் சுற்றாடலைப் பாதுகாத்தல் போன்ற அடிப்படைப் பொறுப்புகளைக் கொண்ட முதலீடுகளையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
காலநிலைச் சவால்களை எதிர்கொள்ள மத்திய வங்கி அறிமுகப்படுத்திய ‘நிலையான நிதி வரைபடம்’ மற்றும் ‘பசுமைப் பத்திரக் கட்டமைப்பு’ மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கு நிதி வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் 88 சதவீதம் தவறவிடப்படும் அபாயம் உள்ளதால், அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து நிதி முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய UN Global Compact அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சான்டா ஓஜியாம்போ, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மூலதனப் பற்றாக்குறை காரணமல்ல என்றும், நிலவும் நிதியைச் சரியான திசையில் திருப்புவதே தற்போதைய தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.
இம்மாநாட்டில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இராஜதந்திரிகள் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தனியார் துறை சிரேஷ்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

