நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான கடிதத்திற்கு ஜனாதிபதியிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை: மல்வத்து மகாநாயக்க தேரர் கவலை

0
6

நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தர்மத்தின் வழியில் அநுசாசனங்களை வழங்கி அறிவிப்பது முற்காலம் தொட்டே இடம்பெற்று வரும் நிலையில், நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பாக முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாமை கவலையளிப்பதாக மல்வத்து மகா விகாரையின் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்டிக்கு வருகை தந்து அவரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பினால் வழக்கமாகப் பதில் அனுப்பப்படும் என்றும், குறைந்தபட்சம் கடிதம் கிடைத்ததா என்பது குறித்தேனும் அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், மகாநாயக்க தேரர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேசுவது கேள்விகளை எழுப்புவதாகவும் கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் எந்தவொரு விடயம் தொடர்பிலும் நிலையான கொள்கைகள் இல்லை என்றும், ஆட்சிக்கு வருபவர்கள் தமக்கு நன்மை பயக்கும் வகையிலேயே பணியாற்றிவிட்டு எதிர்க்கட்சியில் கூறியதை மறந்து விடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டின் கல்வி அமைப்பில் உள்ள குழப்பங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். முதலாம் வகுப்பிலிருந்தே தனியார் மேலதிக வகுப்புகள் பெருகிவிட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேலதிக வகுப்புகள் நடப்பதால் பிள்ளைகள் தகம்பாசல் (ஞாயிறு பாடசாலை) செல்வதில்லை என்றும் தெரிவித்தார். புதிய உலகிற்கு ஏற்ப கல்வி அவசியமானாலும் நாட்டின் கலாச்சாரம், ஒழுக்கம் மற்றும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சந்தையில் உள்ள தரமற்ற அட்டப்பிரிகரங்கள் மற்றும் விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம, உலகின் பல நாடுகளில் நீதிபதிகளின் சேவைக் காலம் 60 வயதை விட அதிக காலம் நீடிக்கப்படுவதால், இலங்கையிலும் அதனை நீடிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here