ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முடிவு எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டது அல்ல; நாட்டின் பொது நலனைக் கருதி எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வலுப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சேவைகள் மாவட்ட மட்டத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மாகாண மட்டத்திலும் பரவலாக்கப்படவுள்ளன.
மேல்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேவையான பௌதிக வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பாகக் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவுமில்லை எனத் தெரிவித்த BASL பிரதிநிதிகள், இது குறித்து மேலும் ஆராய்ந்து பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருமாறு பரிந்துரைத்தனர்.
இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார மற்றும் BASL தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

