சென்னை:
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்றைய தினம் நேரில் சந்தித்து உயர்மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச் சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் மிக முக்கிய அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் மற்றும் செம்மணி விவகாரம்:
குறிப்பாக, தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் திட்டமிட்ட முறையில் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தோண்டப்பட்டு வரும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதோடு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கான நீதியை சர்வதேச அரங்கில் நிலைநாட்டுவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அரசியல் தீர்வு மற்றும் எதிர்கால நகர்வுகள்:
ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இருதரப்பிற்கும் இடையில் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இத்தகைய சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் இருதரப்பும் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது. இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினருக்கு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு:
இவ் உயர்மட்டச் சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களில் 50 ஆண்டுகால நீண்ட அனுபவமிக்க மூத்த தலைவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

