சிரியாவின் அபு அல்-துஹூர் விமானப் படைத்தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா தீவிர கவலை தெரிவித்துள்ளதாகத் துருக்கிக்கான அமெரிக்கத் தூதரும், சிரியா மற்றும் ஈராக்கிற்கான சிறப்புத் தூதருமான டாம் பாரக் தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தத் தாக்குதல்கள் பிராந்திய அமைதிக்கு உதவாத, தேவையற்ற ஒரு பதற்றத்தை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அல்-ஷர்ரா அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிராக எந்தவிதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும், மாறாக பதற்றத்தைத் தணிப்பதற்கே தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இராணுவ மோதல்களைத் தவிர்த்து, அனைத்துத் தரப்பினரும் அமைதியான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாட்டுடன் செயல்படுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

