மலையக மக்களுக்கு காணி உரிமையை மறுக்கக் கூடாது: ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் மனோ கணேசன் எம்பி வலியுறுத்தல்!

0
5

மலையக மக்களின் காணி உரிமைகள் மறுக்கப்படுவதையும், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான தேசப் பொறுப்பாளர் ஷெனன் கோவ்லினிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி நேரில் வலியுறுத்தியுள்ளது என அக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சந்திப்பில் மனோ கணேசனுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்களான பேராசிரியர் விஜயசந்திரன், சட்டத்தரணி பரத் அருள்சாமி, பொறியாளர் பிரஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு குறித்து இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், தற்போதைய அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ‘மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை’ (Central Highlands Protection Authority) என்ற அமைப்பை உருவாக்க முயல்வதாகக் குறிப்பிட்டார்.

நிலச்சரிவு, காலநிலை பாதுகாப்பு போன்ற காரணங்களைக் காட்டி, மலையக பெருந்தோட்டங்களை மீண்டும் காடாக்க வேண்டும் என்ற ஜே.வி.பி-யின் பழைய கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தவே இது வழிவகுக்கும் என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் ஒரு வீட்டிற்கு 28 லட்சம் ரூபாய் வீதம் வீடமைப்பிற்கு நிதி கிடைத்தும், இலங்கையில் மலையக மக்களுக்கு வீடமைக்க காணி வழங்க அரசாங்கம் தயங்குவதாக அவர் சாடினார்.

ஆனால் அதே நேரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வியாபார நோக்கங்களுக்காக டெண்டர் மூலம் காணிகளை வழங்க அரசாங்கம் முன்வருவதாகவும், உழைக்கும் தமிழ் மக்களுக்கு காணி உரிமையை மறுப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி வேடிக்கை பார்க்காது என்றும் அவர் எச்சரித்தார்.

இவ்விவகாரத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியபோது, சிறுபான்மை மக்களின் காணி மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என்றும், இது குறித்து கவனத்தில் கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், மலையக தமிழர்கள் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மேல் மலைநாட்டுப் பகுதிகளில் மட்டுமன்றி இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, மாத்தளை, குருணாகல் மற்றும் கொழும்பு வெளி மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்.

எனவே, இங்கேயுள்ள மக்களுக்கு வீடு கட்ட தலா 20 பேர்ச் காணி உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய பகுதிகளில் வீதியோரங்களில் உள்ள பாதுகாப்பான காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு வீடமைக்க வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாங்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சதியையும் செய்யப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில் எமது மக்களுக்கு எதிராக அரசாங்கமோ அல்லது ஜே.வி.பி-யோ சதி செய்ய நினைத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here