அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே. ஆர். க்ரிஷான் அவர்கள் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நீதித்துறை திருத்தங்கள், சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து பல முக்கிய விவகாரங்களை முன்வைத்துள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை கூட்டுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டத்திற்கு சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சட்டத்தை நன்கு அறிந்த சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளித்து, இந்தத் திட்டத்தை உடனடியாக மீளாராய்ச்சி செய்து தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நாட்டில் சிறைச்சாலைகள் என்பது பாதுகாப்புக்கான இடமாக இருக்க வேண்டிய நிலையில், நீர்கொழும்பு, மாறவில, குருவிட்ட போன்ற பகுதிகளின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக உயிரிழப்புகளும் அசம்பாவிதங்களும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து நீதி அமைச்சர் அலட்சியமாகச் செயல்படாமல், உடனடியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாட்டில் “உயிர் பாதுகாப்பு” கேள்விக்குறியாகியுள்ள சூழலில், உண்மையைப் பேசுபவர்கள் அடுத்த நாள் உயிருடன் இருப்பார்களா என்ற அச்சம் நிலவுவதாகவும், இவ்வாறான பாதுகாப்பற்ற சூழலால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்யத் தயங்குவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் ஒருவேளை உணவிற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக மலையக மற்றும் கிராமப்புற மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அரசாங்கம் கடந்த இரண்டு வருட ஆட்சியில் புதிய திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தாமல் பழைய திட்டங்களையே முன்னெடுத்து வருவதாகவும், மாற்றுக் கட்சிகளின் நல்லாலோசனைகளைக் கேட்டுச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் எதிர்க்கட்சிகளும் வெறும் அரசியல் குழப்பங்களை உருவாக்காமல், நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்றும், ஜனாதிபதி அவர்கள் உடனடியாகத் தலையிட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

