இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜரான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சுமார் மூன்று மணி நேர விசாரணைகளின் பின்னர் இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் 12.46 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
இன்று காலை இலஞ்ச, ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம், அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில வங்கிப் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாகவே அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தனது தனிப்பட்ட உத்தியோகத்தர் (Personal Staff) ஒருவரின் வங்கி கணக்கிற்கு தனது சொந்த நிதியிலிருந்து சில வைப்புகளை மேற்கொண்டிருந்ததாகவும், அவ்வாறு வைப்பு செய்யப்பட்ட பணம் எதற்காக வைப்பு செய்யப்பட்டது மற்றும் எதற்காக செலவழிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே தன்னை ஆணைக்குழு அழைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இதனைத் தவிர இதில் வேறு எந்தப் பிரச்சினையோ அல்லது அரசாங்கப் பணம் தொடர்பான விவகாரங்களோ எதுவும் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா தெளிவுபடுத்தினார்.


