நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

