தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அனஸ் மஹ்மூத் அஹ்மத் ஹம்தான் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவமும், அந்நாட்டின் பாதுகாப்பு முகமையான ஷின் பெட்டும் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமைத் திகதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அனஸ் ஹம்தான், ஹமாஸ் அமைப்பின் மிக மூத்த தலைவர்களின் “வலது கரமாக” (Right-hand man) செயல்பட்டு வந்தவர் என இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.
காசா பகுதியில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளைப் பராமரிப்பதிலும், அவர்களைத் திருப்பி அனுப்பும் செயல்முறைகளிலும் அவர் மிக முக்கியமான “மைய நபராக” (Central Figure) விளங்கியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், தங்களின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹமாஸ் அமைப்பு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது கருத்துக்களையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

