மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது மூன்றாவது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசை பிரிவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தருணத்தில், அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உன்னுடைய 3-வது தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ். ஒட்டுமொத்தமாக நமது குடும்பம் இணைந்து வாங்கும் 10-வது தேசிய விருது இது என்பதால், எங்கள் குடும்பத்திற்கு இது மிகவும் பெருமையான தருணம்.
இசையின் மீதான உனது ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு எப்போதுமே ஊக்கமளிப்பதாக உள்ளது. நீ இன்னும் பல மைல்கற்களை எட்ட வாழ்த்துகிறேன். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது வழக்கமான தாரக மந்திரமான ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற வார்த்தைகளுடன் இந்த வாழ்த்தை அவர் நிறைவு செய்துள்ளார். இதற்கு ஜி.வி. பிரகாஷ், “லவ் யூ சார்” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

