சர்வதேச காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (FIFA) ஆசிய மற்றும் ஓசியானிய பிராந்திய இயக்குநர் சஞ்சீவன் பாலசிங்கம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவை இன்று (24) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் காற்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்படக்கூடிய ஆதரவுகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இலங்கையில் காற்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக FIFA பிராந்திய இயக்குநர் சஞ்சீவன் பாலசிங்கம் உறுதியளித்தார்.

மேலும், சர்வதேச காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (FIFA) நிதியுதவியுடன் இலங்கையில் புதிய காற்பந்து மைதானம் ஒன்றை அமைப்பது குறித்தும், காற்பந்து வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவது குறித்தும் இச்சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்திப்பின் போது இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஜஷ்வர் உமரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


