22வது திருத்தம் பற்றிய அறிவில்லாமலே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன: சிவில் புலனாய்வு முன்னணி சாடல்!

0
10

22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்துச் சரியாகத் தெரிந்த 10 பேர் கூட தற்போதைய எதிர்ப்பார்ப்பாட்டங்களில் இல்லை என்றும், எதிர்க்கட்சியினர் மக்களின் நலனுக்காக அன்றி தமது தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவே வீதியில் இறங்கியுள்ளனர் என்றும் சிவில் புலனாய்வு முன்னணியின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் (24) கொழும்பில் சிவில் புலனாய்வு முன்னணி நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 22வது திருத்தச் சட்டமூலம் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சிகள் போராட்டங்களைச் முன்னெடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகப் பொல்துவ சந்தியில் கூடி கூச்சலிடுவதால் எந்தப் பயனும் உருவாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் இயற்கை கூட ஒத்துழைக்காத நிலமையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளை மிகவும் திறம்பட மாற்றியமைத்துள்ளதோடு சட்டத்தையும் வலுப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே தவறு செய்தவர்கள் தற்போது சிறைக்குச் செல்ல பயந்து, சட்டத்தை வலுப்படுத்தும் புதிய சட்டமூலங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பயணிக்கும் தற்போதைய பயணம் மிகவும் சரியான பாதையில் அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு விடயம் எனக் குறிப்பிட்ட சஞ்சய மஹவத்த, இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, இந்த கொடூரத் தாக்குதலைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேட முற்பட்ட மற்றொரு குழுவினரும் இருப்பதாகவும், அவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இதில் தொடர்புடைய ‘திமிங்கலங்கள்’ போன்ற பெரிய புள்ளிகளுக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here