ஸ்பெயினில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் குடியிருப்புப் பிரச்சனைகளைக் கண்டித்து, தலைநகர் மாட்ரிட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்பெயினில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 87 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் கொண்டுவந்த வீட்டுவசதி தொடர்பான புதிய சட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
தலைநகர் மாட்ரிட் மற்றும் பிற நகரங்களில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அவசரமான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், சில பகுதிகளில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பதாகைகளை ஏந்தி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சில இடங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டங்கள் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அரசாங்கத்திற்கு புதிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

