இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் எழும் பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து, அவசர காலங்களில் விரைவாகச் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் கூறியதாவது, உள்ளூர் அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழுக்கள் மாதம் ஒருமுறையாவது சந்தித்து, சிறைச்சாலை கவலைகள் குறித்து விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.
கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கும் நடைமுறைகள் முறைப்படுத்தப்படும். கைதிகள், சிறை அதிகாரிகளின் நலன் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும்.
சிறைச்சாலைகளில் உள்ள அதிகப்படியான நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளுக்காக முதற்கட்டமாக இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் களுத்துறை சிறைச்சாலையின் புதிய கட்டடப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர், பெண் கைதிகளையும் சந்தித்து உரையாடினார்.

