இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதிகள் குழு முதன்முறையாக பூட்டானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய பூட்டான் மேல் நீதிமன்றத்தில் உரை நிகழ்த்தி இரு நாடுகளின் நீதித்துறை உறவை வலுப்படுத்தினார்.
பூட்டான் மேல் நீதிமன்ற தலைமை நீதியரசர் டுபா ட்ரூக்பா (Duba Drukpa) தலைமையிலான 8 நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உரையாற்றினார்.
நீதித்துறை மற்றும் சட்டத்தரணிகள் அமைப்பின் சுதந்திரம் என்பது தனிப்பட்ட சலுகை அல்ல, அது மக்களுக்குரிய பாதுகாப்பு அரண் என அவர் சுட்டிக்காட்டினார்.
இமயமலையும் இந்தியப் பெருங்கடலும் இரு நாடுகளையும் பிரித்தாலும், நீதியை நிலைநாட்டும் மதிப்புகள் எல்லைகளைக் கடந்தவை என்றும், பூட்டானின் ‘மொத்த தேசிய மகிழ்ச்சி’ (GNH) தத்துவம் மனித நேய அடிப்படையிலான நீதி நிர்வாகத்திற்குச் சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூட்டான் பார் கவுன்சில் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இடையே நீதித்துறை ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் இளம் சட்டத்தரணிகளுக்கான பயிற்சிகளை மேம்படுத்தும் கூட்டு அறிக்கை கையெழுத்தானது.
இந்த விஜயத்தின் போது பூட்டான் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் லியோன்போ நோர்பு செரிங் மற்றும் சட்டமா அதிபர் சோனம் தாஷி ஆகியோரையும் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் கலந்துரையாடியது.

