இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இளம் வீரர் சாய் சுதர்சனின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளதால் இந்திய அணி மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
24 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன், கால்விரல் காயம் காரணமாக அவதியுற்று வருவதால் இலங்கை பயணம் மேற்கொண்ட இந்திய அணியுடன் இணையவில்லை.
கொழும்பில் நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியிலும் அவர் பங்கேற்காத நிலையில், வார இறுதியில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரது இலங்கை பயணம் தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
சாய் சுதர்சன் இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவு, கொழும்பு பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், வொஷிங்டன் சுந்தரும் காயத்தால் அவதியுற்று வருகிறார்.
அத்துடன், வலைப் பயிற்சியின் போது காயமடைந்த இந்திய அணித் தலைவர் சுப்மன் கில்லும் இந்த பயிற்சிப் போட்டியில் விளையாடவில்லை.
ஒருவேளை சாய் சுதர்சன் விலகும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக 3-ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக தேவ்தத் படிக்கல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
இவர் பயிற்சிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 142 ஓட்டங்களைக் குவித்து தனது இடத்தை பலப்படுத்தியுள்ளார்.

