22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதிமன்ற தாமதங்களுக்குத் தீர்வாகாது: நீதித்துறை சுதந்திரத்தைப் பாதிக்கும் குறுகிய நோக்கம் கொண்டது – அஜித் பி. பெரேரா

0
3

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமானது, நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் வழக்குத் தாமதங்களுக்கு எவ்வித தீர்வையும் வழங்காது என்றும், மாறாக நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
வழக்குத் தாமதமும் உண்மை நிலவரமும்
நாட்டின் நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவுக்கு வருவதில் பெரும் தாமதம் நிலவுவதை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதனைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்களை நிறுவுதல், நீதிபதிகள் மற்றும் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சாட்சியியல் கட்டளைச் சட்டம், சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவைகளைத் திருத்துதல் போன்ற நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளே அவசியமாகும்.
2025 ஜூன் 30 நிலவரப்படி நாட்டில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 72% (8 லட்சத்திற்கும் அதிகமானவை) நீதிவான் நீதிமன்றங்களிலும், 23% மாவட்ட நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. அதாவது நாட்டின் மொத்த வழக்குகளில் 95% இந்த கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன. ஆனால், அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்தத்தில் இந்த 95% வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்தவோ அல்லது அதன் தரத்தை உயர்த்தவோ எவ்வித முன்மொழிவுகளும் சேர்க்கப்படவில்லை.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல்
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 ஆகவும், நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 ஆகவும் அதிகரிப்பதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளின் வேகத்தையோ அல்லது தரத்தையோ உயர்த்த முடியும் எனக் கூறுவது முற்றிலும் பொய்யான கூற்றாகும். தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிக்கும் குறுகிய நோக்கத்தை முன்வைத்தே அரசாங்கம் இந்த உரையாடலை ஆரம்பித்து, பின்னர் ஏனைய நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், உயர்நீதிமன்றத்தில் 17 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேரே உள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 பேருக்கு பதிலாக 16 பேரும், மேல் நீதிமன்றத்தில் 110 பேருக்கு பதிலாக 93 பேருமே சேவையாற்றுகின்றனர். இவ்வாறு நிலவும் வெற்றிடங்களைக் கூட நிரப்பாமல், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்த முன்மொழிவது எவ்வித தர்க்கமுமற்ற செயலாகும்.

நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
அரசியலமைப்பின் 107ஆவது சரத்தை திருத்துவதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

பதவியிலிருக்கும் நீதிபதிகளுக்கு சேவைக்கால நீடிப்பை வழங்குவது மறைமுகமான சலுகையளிப்பாகவே அமையும். அரசியலமைப்பின் 107ஆவது சரத்தில் கைவைப்பதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பும் (சர்வஜன வாக்கெடுப்பு) அவசியமாகும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இத்திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் தற்போதைய ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவர உழைத்த சட்டத்தரணிகள் உட்படப் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு
இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நாட்டின் பிரஜைகளுக்கு இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறான மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் அடங்கிய முழுமையான நீதிபதிகள் குழாம் (Full Bench) முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாப்பதுமான தீர்ப்பைப் பெற முடியும்.

நிர்வாக ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம், சட்ட ஆணைக்குழுவுடனோ, சட்டத்தரணிகளுடனோ அல்லது நாடாளுமன்றத்திலோ உரிய கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருகிறது. நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் இந்த ஆபத்தான திருத்தத்திற்கு எதிராக நாட்டின் அனைத்துத் தரப்பினரும் அணிதிரள வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here