காசாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்களின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள ஆவணங்களை இழந்துள்ளனர்.
இதனால் அவர்கள் வங்கிச் சேவைகள், பயணம் மற்றும் அடிப்படை உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலின் குண்டுவீச்சுகளால் காசாவின் சிவில் பதிவு முறைமை கடுமையாக சேதமடைந்துள்ளது.
அத்துடன், புதிதாக விநியோகிக்கப்படும் ஆவணங்களை பாலஸ்தீனிய நாணய வாரியத்துடன் இணைக்கப்பட்ட வங்கிகள் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கூறப்படுகின்றது.
ஆவணப் பரிமாற்றங்கள் மீது இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த பல மாணவர்களின் பயணங்களும் முடக்கப்பட்டுள்ளன.

