22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்ல மக்கள் சார் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்: முழுமையான நீதியரசர்கள் அமர்வை கோரவும் நடவடிக்கை

0
3

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் நின்று தீவிரமாகப் போராடப் போவதாகவும், அதனைத் தோற்கடிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாகவும் மக்கள் சார் கூட்டு எதிர்க்கட்சி (People’s Joint Opposition) அறிவித்துள்ளது.

இன்று (10) முற்பகல் கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், அரசாங்கம் முன்வைத்துள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தமானது மிகவும் ஆபத்தானது எனச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மனித உரிமைகள், எதிர்க்கட்சியின் பங்கு மற்றும் இறுதியாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடித்தல் போன்ற தெளிவான ஆபத்துகள் உருவாகுவதாகவும், இது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் கூட்டுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடிய ஒரு திருத்தம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கே மகஜர் ஒன்றை அனுப்பிய போதிலும், அதற்கு இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை என்றும், சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வழக்குத் தாமதங்களைத் தவிர்ப்பதற்காகவே இதனைச் செய்வதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் போலித் வாதம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தத் திருத்தத்தை மக்கள் தீர்ப்பு (Referendum) இல்லாமல் நிறைவேற்ற முடியாது என வாதிட்டு நிச்சயமாக உயர் நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள அனைத்து 12 நீதிபதிகளையும் கொண்ட முழுமையான நீதிபதிகள் அமர்வு (Full Bench) முன்னிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன, அரசியலமைப்பின் 107 (5) உறுப்புரையைத் திருத்தி, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு பலத்த அடி விழுகிறது என்றார். சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட நீதித்துறை அமைப்பின் திறமை மற்றும் வழக்குகள் குவிந்து கிடப்பது குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த அரச இயந்திரமும் பாதிக்கப்பட்டு நாட்டில் பெரும் இளைஞர் கொந்தளிப்பு உருவாகும் சூழல் ஏற்படும் என எச்சரித்தார்.

எக்சத் ஜன ரஜ பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக உரையாற்றுகையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டிருப்பது நீதித்துறையின் சுயாதீனத்திற்காகவே எனக் கூறினார். தனி நபர்களை இலக்கு வைத்து இவ்வாறு அரசியலமைப்பை மாற்ற முற்படுவது ஆபத்தான முன்னுதாரணம் என்றும், வழக்குத் தாமதங்களைத் தடுக்க வேண்டுமாயின் 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டின் அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அரசாங்கம் இன்று மக்கள் வாக்களிக்காத ஒரு ‘சிவப்பு ஜுண்டா’ (Red Junta) மூலமே நிர்வகிக்கப்படுவதாகவும், மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு நாட்டை காட்டிக்கொடுக்க இடம் அளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணை ஒட்டுப்போடும் திருத்தங்களை கொண்டு வருவதற்காக அல்ல, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே ஆகும் என்றார்.
பாராளுமன்றத்திற்கு 65 வயது அதிகம் என்று கூறும் அரசாங்கம், உயர் நீதிமன்றத்திற்கு 65 வயது இளமை எனக் கூறுவது விசித்திரமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குத் தாமதங்களுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயதை அதிகரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்காகச் செய்யப்படும் சதி என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் சட்டத்தரணி பிரியதர்ஷண குருகே மற்றும் நவ ஜனதா பெரமுனவின் உப தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here