கடந்த காலத்தில் அரச சேவைக்கான நியமனங்கள் முறையான தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக வரலாற்றில் அரச சேவை கடுமையாக வீழ்ச்சியடையச் செய்யப்பட்டிருந்தது என்றும் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
“கடந்த காலத்தில் நியமனங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன, பதவி உயர்வுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் அறிவோம். அரச சேவைக்கு ஏற்பட்ட நிலைமையின் இறுதியில், அரச ஊழியர் மரத்தில் கட்டப்பட்டு, அவரது முதுகெலும்பு முறிக்கப்படும் சூழலே காணப்பட்டது.
நாட்டின் பிரதான இயந்திரமாக விளங்கும் அரச சேவையை மீண்டும் வலுப்படுத்துவதே எமது முக்கிய பொறுப்பாகும். அரச ஊழியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களின் சம்பளத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சுமார் 76,000 புதிய ஊழியர்களை அரச சேவையில் இணைத்து, இத்துறையை மேலும் திறம்பட செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி போன்ற அனைத்தும் அரசியல் தலையீடுகளின்றி முறையான பொறிமுறையொன்றின் மூலமே இடம்பெறும். தவறான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் மட்டுமே அரசாங்கம் அதில் தலையிடும்.”
அரச ஊழியர்கள் தங்களது திறமைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பளிக்கப்பட்டு, நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையுடன் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் அவர் இதன் போது வலியுறுத்தினார்.

