மும்பையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலத்தில், மகாத்மா காந்தியின் அரிய கையெழுத்துக் குறிப்புகள் மற்றும் பொருட்கள் 16.2 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் போய் புதிய சாதனை படைத்துள்ளன.
இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போயிருப்பது இதுவே முதல்முறையாகும்.
‘சஃப்ரான்ஆர்ட்’ ஏல நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், 1944 முதல் 1946 வரையிலான காலப்பகுதியில் அகிம்சை, உண்மை மற்றும் சுயகட்டுப்பாடு குறித்து காந்தியடிகள் எழுதிய 688 கையெழுத்துச் செய்திகள் இடம்பெற்றிருந்தன.
இவை பின்னர் (A Thought for the Day) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியடிகளின் தீவிர பின்பற்றுபவருமான ஆனந்த் டி.ஹிங்கோரானியின் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்த காந்தியின் கடிதங்கள், புகைப்படங்கள், கையடக்க ராட்டை (Peti Charkha) மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களும் இதில் ஏலம் விடப்பட்டன.
காந்தியடிகளின் கொள்கைகளையும் இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளையும் உலகிற்குப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த ஏலம் நடத்தப்பட்டதாக ஹிங்கோரானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இவற்றை ஏலத்தில் வாங்கியவரின் விவரங்களை ஏல நிறுவனம் வெளியிடவில்லை.

