தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள ‘மண்டாடி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இப்படம் வெளியான வெறும் 10 நாட்களுக்குள்ளாகவே உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டி வெற்றிநடை போட்டு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் பாரம்பரியமான படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
தற்போது இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளதை படக்குழு பிரத்யேக போஸ்டர் வெளியிட்டு கொண்டாடியுள்ளது. இதன் மூலம் நடிகர் சூரியின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் மாறியுள்ளது.

