மட்டக்குளி பகுதியில் 3 பேர் உயிரிழக்கவும், 12 பேர் காயமடையவும் காரணமான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட மின்சார காரின் ஓட்டுநர், நீதிமன்றத்தில் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
தான் எந்தவித அழுத்தமும் கொடுக்காத நிலையில், கார் திடீரென தானாகவே வேகமாக இயங்கி கட்டுப்பாட்டை இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காரில் ஏதேனும் இயந்திரக் கோளாறு உள்ளதா என்பதை கண்டறிய, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தலைமையிலான நிபுணர் குழு மூலம் தொழில்நுட்ப பரிசோதனை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், ஓட்டுநருக்கு மருத்துவ சபை மூலம் மனநல பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓட்டுநர் கஞ்சா பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவரது சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர்.
அவர் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த மருந்துகளின் தாக்கமே மருத்துவப் பரிசோதனையில் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பொதுமக்களின் அமைதியின்மையைக் கருத்திற் கொண்டு பொலிஸார் பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

