இலங்கையும் தாய்லாந்தும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உடன்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, சாதாரண கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களுக்கு விசா விலக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து இரு தரப்பும் கலந்துரையாடின.
பெங்கொக்கில் நடைபெற்ற கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சருண் சாரோன்சுவான் ஆகியோருக்கு இடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள விசா விலக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுவாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், மக்களிடையேயான தொடர்புகளை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் இடப்பெயர்வு, கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பானது இலங்கை – தாய்லாந்து உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக நடைமுறைச் சாத்தியமான துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் இரு நாடுகளின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

