பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்த பின் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வெளியிட்ட செய்தி அறிக்கை

0
3

ஜனநாயக ரீதியிலான எந்தவொரு சட்டத்திருத்தத்திற்கும் முன்னதாக சிவில் சமூகத்தினருடன் திறந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மக்கள்சார் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் சட்ட சீர்திருத்த நடைமுறைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மக்கள்சார் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இன்று (12) காலை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) அவர்களைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் ஒரு புதிய சட்டமோ அல்லது சட்டமூலமோ கொண்டுவரப்படும்போது, அதுகுறித்து விரிவான உரையாடல்களும் கலந்துரையாடல்களும் நடைபெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கம், பல்கலைக்கழகங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அனைத்தையும் இதில் உள்வாங்கி, அவர்களின் கருத்துக்களை ஆழமாகப் பரிசீலித்த பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தற்போதைய இலங்கையின் நிலைமை குறித்துக் கவலை வெளியிட்ட அவர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்த போதிலும், அக்கடிதத்திற்கு என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது என்றும், கடிதம் கிடைத்ததாகக் கூட உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து நீதி அமைச்சரிடம் கேட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என்றும், ஜனாதிபதி இது பற்றித் தம்மோடு பேசவில்லை என்றும் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் பீரிஸ், விஷயம் சார்ந்த அமைச்சரோ அல்லது அரசாங்கமோ அறியாமல், எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி அனைத்தும் முற்றிலும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இன்றைய தினம் ஜனாதிபதி, சட்டத்தரணிகள் சங்கத்திற்குச் சந்திப்பிற்கான நேரத்தை ஒதுக்கியுள்ளமை குறித்து விமர்சித்த அவர், இச்செயற்பாடு பொருத்தமற்றது மற்றும் நீதித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து இதனைத் தவிர்க்குமாறு வலியுறுத்தவே சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியைச் சந்திக்க முற்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், வர்த்தமானி அறிவித்தல் வெளியீட்டு, அமைச்சரவை தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னரே அவர்களுக்கு இச்சந்திப்பு வழங்கப்பட்டுள்ளதால், இதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்றும், இது முற்றிலும் ஒரு கண்துடைப்புச் செயலாகும் என்றும் அவர் விமர்சித்தார்.
அடுத்த வாரம் தாம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் జీ.எல். பீரிஸ், நிலுவையிலுள்ள வழக்குகள் அல்லது சட்ட தாமதங்களுக்கு இந்த நடவடிக்கையால் எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதைச் உச்சநீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்தவுள்ளதாகக் கூறினார். உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 1% வழக்குகளே உள்ள நிலையில், இந்த நடவடிக்கையினால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும், மாறாகப் பெரும் அழிவே ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பதாகக் கூறியதையடுத்து, தமக்கும் அவ்வுரிமையை வழங்குமாறு செவிலியர் சங்கம் கோரியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசமைப்பின் 12-வது பிரிவின் கீழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அரச சேவைத் தலைவர்கள் என அனைவருக்கும் இது வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இது புதிய சிக்கல்களை உருவாக்குமே தவிர தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும் தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் அளப்பரிய மதிப்ப வைத்துள்ள நீதித்துறைக்கு இதன் மூலம் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதது எனச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட பெற முடியாமல் வீதியில் இறங்கியுள்ளமை, சிறைச்சாலை மரணங்கள், சுகாதாரத் துறையில் மருந்துப் பற்றாக்குறை மற்றும் கல்வித் துறைப் பிரச்சினைகள் எனப் பல முக்கிய சவால்கள் நாட்டில் நிலவும் போது, அவற்றைக் கவனத்திற் கொள்ளாது நீதிபதிகளின் பிரச்சினையிலேயே அரசாங்கம் முழுக் கவனத்தையும் செலுத்துவதாகச் சாடினார். நாட்டின் உண்மையான தேவை இதுதானா என்பதைத் தாம் அரசாங்கத்திடம் கேள்வியாக முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, ‘சத்ய கவேஷகயோ’ அமைப்பின் நிறுவனர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் நவ ஜனதா முன்னணியின் பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here