பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதோடு அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

0
2

இலங்கையின் தற்போதைய சமூக-அரசியல் சூழல், பன்மைத்துவம், ஆடை சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை பல இனங்கள், மொழிகள் மற்றும் மதங்கள் வாழும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆடை அணிவது என்பது தனிநபரின் உரிமை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயமாகும் என்றார். வேஷ்டி, மேற்கத்திய ஆடைகள், முகத்தை மூடும் அல்லது திறக்கும் கலாச்சார அடையாளங்கள் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு சமூகத்தின் பழக்கவழக்கங்களுக்கும் பரஸ்பரம் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அங்கீகரிக்கும் போதே நாட்டின் பன்மைத்துவம் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளில் தெளிவின்மை இருந்தால், அதை உடனடியாகத் திருத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனக் கூறிய அவர், சுற்றறிக்கைகள் ஒன்றும் மாற்றியமைக்க முடியாத புனித நூல்கள் அல்ல என்பதால் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயங்கக் கூடாது என்றார்.

மேலும், தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண சபை தேர்தல்கள் போன்ற ஜனநாயக ரீதியான கோரிக்கைகள் குறித்துப் பேசும்போது, “எங்கள் தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என அமைதி காக்கும் அரசுத் தரப்பு, சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டைக் கேள்வி கேட்பது நியாயமற்றது என்று விமர்சித்தார்.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கமே சமூகத்தில் எழும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைந்து அமைத்துள்ள மேடை என்பது தேர்தல் கூட்டணி அல்ல என்றும், அது பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு ஜனநாயகத் தளமே என்றும் தெளிவுபடுத்தினார்.
இதைக் கண்டு சிலர் அச்சமடைந்து, தமிழ் பேசும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், சமூக ஒற்றுமையைப் பேண அரசாங்கம் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here