தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாகாண மட்டத்தில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 48,725 நோயாளர்களும் (52.96%), தென் மாகாணத்தில் 13,533 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் 19,631 பேரும், கொழும்பில் 18,245 பேரும் (மாநகர சபை எல்லைக்குள் 3,700), கண்டியில் 6,613 பேரும், மாத்தறையில் 6,036 பேரும், களுத்துறையில் 5,951 பேரும், காலியில் 5,039 பேரும், இரத்தினபுரியில் 4,935 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்த அடிப்படையில் ஜூலையில் அதிகபட்சமாக 29,968 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும் பதிவாகியுள்ளனர். ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நுளம்பு பெருகும் இடங்களை அழித்து சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறவும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.

