நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.
கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி நேபாளத்தில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 5100 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் தமது வீடுகளையும், வர்த்தகங்களையும் இழந்து அங்குள்ள மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைய நேபாளத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் வாக்குறுதி அளித்திருந்தது.
அதனை நிறைவேற்றும் வகையில், நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நேபாள அரசாங்கத்திடம் இன்று (9) கையளித்துள்ளதாக காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
காத்மண்டுவில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து நேபாள வெளிவிவகார அமைச்சர் சிஷிர் கனாலிடம் (Shisir Khanal) இந்த நிதி உதவியானது உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, தூதுவர் தெல்பிட்டிய இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேபாள மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், பங்கினையும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பேரழிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

