நீதித்துறையை அரசியலாக்க முயற்சி: ஜனநாயகத்திற்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

0
7

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவது தொடர்பாக ‘ஜனநாயகத்திற்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம்’ தனது பலத்த கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.

இன்றைய தினம் (30) கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் இயக்குனர் அபீத எதிரிசிங்க, நாட்டின் தற்போதைய நீதித்துறை நிலைமை குறித்துப் பல அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசின் இத்தீர்மானத்திற்கு ‘நீதிபதிகள் சேவை சங்கம்’ மற்றும் ‘இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்’ ஆகிய நாட்டின் பிரதான நீதித்துறை சார்ந்த இரு அமைப்புகளும் மிகத் தெளிவாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணையில் நீதித்துறை சுதந்திரத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளதோடு, நீதிபதிகள் சேவை சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்ற 65 உறுப்பினர்களும் ஒருமனதாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.

இவ்வாறு நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஏகோபித்த குரலில் எதிர்த்தபோதிலும், அரசாங்கம் தனது அமைச்சரவையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று தன்னிச்சையாக நிறைவேற்ற முயல்வது எதேச்சதிகாரமான போக்காகும்.

நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் நிலுவையில் உள்ளதால் தான் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக அரசு கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும்.

ஏனெனில் அதிகளவிலான வழக்குகள் மேல் நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளன.

மாறாக, அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளைப் பாதுகாக்கவும், நீதித்துறையைத் தங்கள் அரசியல் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவுமே அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

நாடு எத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தபோதிலும், நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றமே எப்போதும் நாட்டைப் பாதுகாத்து நின்றன.
ஆனால், தற்போது அரசாங்கம் தனது மக்கள் ஆணையைக் தவறாகப் பயன்படுத்தி, நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் ஒடுக்கி, நீதிமன்றத்தைச் சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள முயல்கிறது.

நீதிமன்றத்தின் நிலைமை இதே போக்கில் தொடர்ந்து, அரசின் இந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டின் நீதித்துறைக்கு நினைவஞ்சலி செலுத்தி எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டிய பரிதாப நிலைமையே ஏற்படும் என்று அபீத எதிரிசிங்க கவலையுடன் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here