தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0
4

தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

“தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்போது காணி விடுவிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்ற வழமையான விடயங்கள் குறித்தே கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் மக்கள் எமக்கே தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணையைப் பாதுகாக்கும் மற்றும் மதிப்பளிக்கும் பொறுப்பு எமக்குள்ளது. அதற்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று, மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவரிடமே மீண்டும் ஒப்படைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பிரகாரமே மாகாண சபைத் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here