நாடளாவிய ரீதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று (23) விசேட தூய்மையாக்கல் பணியொன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கௌரவ ஏ. பன்னீர்செல்வம் அவர்களின் நேரடிப் பணிப்பின் பேரிலும், இரண்டாம் குறுக்குத்தெரு வர்த்தக சங்கத்தின் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்த அவசர வடிகால் துப்புரவுப் பணி ஆரம்பிக்கப்பட்டது.

கூட்டு முயற்சியில் தூய்மையான வர்த்தக வலயம்
புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அதிகம் நிறைந்த ஒரு பகுதியாகும். இங்குள்ள வடிகால்களில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, நீர் தேங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாநகர சபை உறுப்பினர் ஏ. பன்னீர்செல்வம் அவர்களின் துரித ஒருங்கிணைப்பில், கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் களமிறங்கி வடிகால்களை முழுமையாகச் சுத்தம் செய்தனர்.
டெங்கு அபாயத்திற்கு முற்றுப்புள்ளி
தற்போது நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வரும் சூழலில், கொழும்பு மாநகரப் பகுதியை டெங்கு அபாயத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வர்த்தக சங்க பிரதிநிதிகள், தங்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகர சபை உறுப்பினர் ஏ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன், இப்பகுதியைத் தொடர்ந்து தூய்மையாகப் பேண வர்த்தகர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



