உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இப்ராஹிம் என்பவர் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பி, அதனை மற்றவர்கள் மீது சுமத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசாங்கமானது தனக்கு வாக்களித்த மற்றும் தங்களைப் பாதுகாத்த நபர்களைக் காப்பாற்றவே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்றும், இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் பயணம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நாட்டு மக்களே சரியான பதிலை வழங்குவார்கள் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
நாங்கள் கிராமங்களுக்குச் செல்லும்போது மக்களின் உண்மையான நிலைமையை நேரில் காண்கிறோம் என்றும், நாட்டில் வாழ்க்கைச் செலவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் இந்த அரசாங்கத்தின் கீழ் முற்றிலுமாக நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும், மக்களின் இந்த அவல நிலைக்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவித தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் நாமல் ராஜபக்ச மேலும் சாடினார்.


