கொலன்னாவ எரிபொருள் சேமிப்பு வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் எரிபொருள் தாங்கிகளை இன்னும் ஓராண்டு காலத்திற்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்திற்கு நேற்று (21) விஜயம் செய்த அமைச்சர், அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 6 புதிய எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
3.7 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் மூலம், நாட்டின் எரிபொருள் சேமிப்புத் திறன் 64,000 கனமீட்டரால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை 40 முதல் 45 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குழாய் வழிகள் மற்றும் பணியாளர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் சக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலான இத்திட்டம் 2027 செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
