ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலைய வளாகத்திற்குள், அமெரிக்காவின் அண்மைக்கால வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள புதிய சேதங்கள் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக அம்பலமாகியுள்ளன.
ஐரோப்பிய விண்வெளி முகமையின் சென்டினல்-2 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்த அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளிவந்துள்ளன.
ஜூலை 7, ஜூலை 12 ஆகிய இருவேறு திகதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிடும் போது, அணுமின் நிலைய வளாகத்திற்குள் புதிதாகப் பலத்த தாக்குதல் வடுக்கள் உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, அணுமின் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள துணை ஆதரவுக் கட்டமைப்பு வசதிகள் அமைந்திருக்கும் பகுதியிலும் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான தெளிவான தடயங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அணுமின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
