ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணியில் முக்கிய மூத்த வீரர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் T20 அணிக்குத் திரும்பியுள்ளார்.
அவருடன் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட் காப்பாளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிம்பாப்வே தொடரில் விளையாடிய ரிங்கு சிங், மயங்க் யாதவ் உள்ளிட்ட 8 வீரர்கள் நீக்கப்பட்டு, பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகிய அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பங்கேற்பு அவர்களின் உடற்தகுதியை பொறுத்தே அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய குழாமில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, நிதீஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

