“நாடே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், சிறுவர்களை போதைப்பொருள் ஆபத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களை புனர்வாழ்வளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று (06) “நாடே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்கிரமசிங்க மற்றும் ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பிரதிப் பணிப்பாளர் (தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி) பிரதீப் கொஹொலாநேகெதர ஆகியோரின் பங்கேற்புடன் இவ்ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர், சிறுவர் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அமைச்சின் சார்பில் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு ஐந்து அதிகாரிகள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “நாடே ஒன்றாக” திட்டத்திற்கு அமைவாக சிறுவர்களை போதைப்பொருள் பேராபத்திலிருந்து பாதுகாக்கும் வேலைத்திட்டங்களில் இந்த அதிகாரிகளை ஈடுபடுத்தி, உரிய பணிகளை மிகவும் திறம்பட நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொஹொலாநேகெதர, “நாடே ஒன்றாக” வேலைத்திட்டத்துடன் இணைந்து தமது நிறுவனத்தின் புனர்வாழ்வு சிகிச்சை கொள்ளளவை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.


