அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நாகித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளது பங்களாதேஷ் அணிக்குப் பெரிய இழப்பு என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது தெரிவித்துள்ளார்.
பக்கவாட்டுத் தசைப்பிடிப்பு காரணமாக நாகித் ராணாவும், தொடடைப்பகுதி காயம் காரணமாக சொரிபுல் இஸ்லாமும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராணாவும் சொரிபுல்லும் இல்லாதது பின்னடைவு என்றாலும், அணியில் உள்ள மற்ற இளம் பந்துவீச்சாளர்களுக்கு இது தங்களை நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பு எனத் டஸ்கின் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது அணிக்கு நல்ல நம்பிக்கையைத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றமளித்தாலும், அவுஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மையை உணர்ந்து கொள்ள அது நல்லதொரு பயிற்சியாக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
டார்வின் நகரில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட முக்கிய பேட்டர்களுக்கு எதிராகச் சிறந்த திட்டமிடலுடன் களமிறங்கவுள்ளதாகவும் டஸ்கின் அகமது தெரிவித்தார்.

