ஒருநாள் உலகக் கிண்ண வடிவம் மாற்றம் – ஐசிசிக்கு எதிராக கண்டனம்

0
3

ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் வடிவமைப்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மேற்கொண்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கெட் ஸ் கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் சங்கம் (KNCB) ஆகியவை இணைந்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அடுத்த உலகக் கிண்ணத் தொடருக்கு 18 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த திடீர் மாற்றங்கள் வளர்ந்து வரும் அசோசியேட் நாடுகளின் வளர்ச்சியை முடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஐசிசியுடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், 2 வாரங்களுக்கும் மேலாக எவ்வித அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ பதிலும் வரவில்லை என்றும், இது ஏமாற்றமளிப்பதாகவும் மரியாதையற்றதாகவும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

14 அணிகள் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள புதிய அமைப்பில் ‘சூப்பர் சீரிஸ்’ சுற்று சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் 12, 13 மற்றும் 14 ஆம் இடங்களில் உள்ள அணிகளில் ஒன்று முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும்.

தகுதிச் சுற்றின் நடுவில் போட்டி விதிகளை மாற்றுவது, குறைந்த நிதி ஆதாரங்களுடன் இயங்கும் அசோசியேட் வாரியங்கள் மற்றும் வீரர்களின் பல வருட உழைப்பையும் நிதி நிர்வாகத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என அவை சுட்டிக்காட்டியுள்ளன.

உலகளவில் கிரிக்கெட்டை விரிவுபடுத்த விரும்புவதாகக் கூறும் ஐசிசி, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு அசோசியேட் நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here