இலங்கை அரசே! எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்” – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

0
4

வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடி வரும் வடகிழக்கு மக்களின் காணி உரிமை, மனித உரிமை மற்றும் நீதிக்கான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று (14 ) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாகப் பாரிய ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை ஆகிய பகுதிகளில் தமது பூர்வீக காணிகள் மற்றும் மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தரக் கோரி 1,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்குச் சமூக ஒற்றுமையையும் வலுவான ஆதரவையும் வெளிப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்டது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பூர்வீகக் காணிகள் எவ்வித தாமதமுமின்றி அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்.

நாட்டின் தேசிய வருமானத்திற்கும் கிராமிய பொருளாதாரத்திற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கி வரும் இம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும்.

மன்னார் -முள்ளிக்குளம், சிலாபத்துறை, பள்ளிமுனை, சன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் நிலங்களை இழந்து தவிக்கும் மக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்திற்குத் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
முந்தைய அரசாங்கங்கள் எங்களை வாக்குறுதிகளால் ஏமாற்றியது போலன்றி, தற்போதைய புதிய அரசாங்கமும் அதிமேதகு ஜனாதிபதியும் விரைந்து தலையிட்டு, மக்களின் காணிகளை மீள ஒப்படைத்து நியாயமான தீர்வினை வழங்க வேண்டும்.

இப்போராட்டத்தில் மனித உரிமைகள், காணி உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தமது கண்டனத்தையும் நியாயமான கோரிக்கைகளையும் பதிவு செய்து அவ் இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here