ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். நாட்டின் சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஐநா போன்ற பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், முதுநிலை மற்றும் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையின் பேரிலேயே தாம் இந்த முடிவுகளை எடுத்ததாக ஜனாதிபதி கூறுவது சந்தேகத்திற்குரியது என்றும், ஜனாதிபதியின் நடவடிக்கைகள் நீதித்துறையின் வளர்ச்சிக்கானதா அல்லது வெறும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சியா என்பதில் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மேல் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், ஓய்வுபெறும் வயதை மட்டும் உயர்த்துவது நீதித்துறையின் தேக்க நிலைக்கும் வழக்கின் தாமதத்திற்கும் தீர்வாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முற்றிலும் தவறிவிட்டதாகக் காரசாரமாக விமர்சித்த அவர், கிராமப்புற மக்கள் பெரும் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக நெல்லை விற்றுக்கொள்ள முடியாமை, உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமை மற்றும் வருமானம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல பிரச்சினைகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, சேதமடைந்த வீடுகள் மற்றும் குளங்களை புனரமைப்பதற்கோ அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.
அதேபோல் நாட்டின் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம் தன் தோல்விகளையும் தவறுகளையும் மறைக்கத் தொடர்ந்து ராஜபக்ஷக்கள் மீது குற்றம் சுமத்தி தப்பிப்பதாகச் சாடிய நாமல் ராஜபக்ஷ, மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க மறுப்பதாகக் கூறினார்.
விவசாயத் துறைக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், வெறும் பேச்சளவில் நிற்காமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியில், அநுராதபுர மாவட்டத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாரிய மாவட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

