அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணத்தினாலேயே சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை : சஜித்

0
4

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் கனம் நீதியரசர்களை உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்காமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பான சகல கடித ஆவணங்களையும் ஹன்சாட் பதிவிடுகிறேன்.

இது தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகருக்கும் சபை முதல்வருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாக தவறான பிரசாரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இது தனது தனிப்பட்ட ஒரு அழைப்பு அல்ல, நான் ஒரு facilitator ஆகவே இதில் செயற்பட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகர் ஊடாக பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றே நான் கூறினேன்.

இதனை வேறு விதமாக தவறாக சித்தரித்துள்ளனர். 2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து, எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை காலத்திற்கேற்றது என்றும், அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இது தொடர்பில் அரச தரப்பில் அச்சுறுத்தல் விடுக்கும் பாணியிலான நிலைப்பாடு காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஒரே நிலைப்பாட்டிற்கு வருமாறு அதில் கோரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலான தொனியிலேயே உரையாற்றினர். நான் அதனோடு உடன்படுகிறேன்.

இந்நாட்டில் அரசியலமைப்பின் ஊடாக கருத்து தெரிவிக்கும், பேச்சுச் சுதந்திரம் இல்லையா என கேள்வி எழுப்புகிறேன்.

அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை நிறைவேற்று அதிகாரத்தினாலோ, மூன்றில் இரண்டு பெரும்பான்மையினாலோ, எந்தவொரு நபராலும் கட்டுப்படுத்த முடியாது.

ஆகவே இப்போதாவது இந்த கலந்துரையாடலுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். சபாநாயகரும் ஒரு facilitator ஆக இப்போதாவது செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இந்த விடயத்தில் தெளிவாகவே அரசாங்கத்திடமிருந்து அச்சுறுத்தலான தோரணை காணப்பட்டது. தற்போது சட்டத்தரணி சங்கம் வேறொரு நாளைக் கோரியுள்ள வேளையில், அரசாங்கத்திற்குச் சார்பான ஊடகங்கள் சட்டத்தரணிகள் சங்கம் அதனை நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

ஆனபடியால் இப்போதாவது இவை திருத்தப்பட்டு, சரியான விடயங்களை முன்வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here