அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.
கனிம எண்ணெய் வள அபிவிருத்தி குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எல்.என்.ஜி (LNG) இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டது குறித்து கடந்த காலத்தில் எதிர்க்கட்சியினர் விமரிசித்த போதிலும், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசியல் பொய்களைக் கூறாமல் இந்தச் சட்டமூலத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளங்களிலிருந்து உண்மையான பிரயோஜனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஜனாதிபதி, நாடு பூராகவும் சென்று புதிய பொய்களைப் பரப்பி வருவதாகக் கூறினார்.
5G தொழில்நுட்பம் செயற்பாட்டில் இருக்கும் காலத்தில் 1,000 4G கோபுரங்களை அமைப்பதாகக் கூறுவதும், நிதி ஒதுக்கீடு கூட செய்யப்படாமல் 400 குளங்களைச் சீரமைப்பதாகக் கூறுவதும் மக்களுக்குச் செய்யும் ஏமாற்று வேலை எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் வேலையின்மை மற்றும் பொருளாதாரச் சரிவு குறித்து சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்தில் 35,000 பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை தருவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின்படி இலங்கையில் பட்டதாரிகளில் 43 சதவீதமானோருக்கு வேலை வாய்ப்பு இல்லை எனக் கூறினார்.
மேலும், தெற்காசியாவிலேயே வேலையின்மை தீவிரமாக உள்ள இடங்களில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ள அதேவேளை பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெறும் பல்வேறு ஊழல் சம்பவங்களின் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு மௌனம் காப்பதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை, அமைச்சைச் சேர்ந்த நிதிச் செயலாளர் தவறான கணக்குக்கு 2.5 மில்லியன் டொலர்களை அனுப்பியமை, 1 பில்லியன் டொலர் அளவுக்குக் கறுப்புப் பணம் வெளியேற்றப்பட்டமை மற்றும் விவசாயிகளுக்குக் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணம் வழங்கப்படாமை போன்ற பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் நஷ்டஈடுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், அவசர கொள்முதல் என்ற பெயரில் தரம் குறைந்த நிலக்கரிகள் இறக்குமதி செய்யப்பட்டு நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் சாடினார். எனவே, அரசாங்கம் கடந்துசென்ற இரண்டு ஆண்டுகளைக் கொண்டாடுவதை விடுத்து, மக்களுக்கு அளித்த பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றி உண்மையாக உழைக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


