சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான மனோஜன் சிவராசாவைக் காப்பாற்றுவதற்காக, அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் சமய உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சிவராசாவிற்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஷரியா சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க அல்லது தண்டனையைக் குறைக்கக் கோரி இலங்கை ஜனாதிபதி அனுப்பும் அவசரக் கடிதத்தைச் சவூதி மன்னரிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதற்காக, பிரதி சபாநாயகர் ரிஸ்வி தலைமையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றக் குழுவொன்றைச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது சவூதி வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் ஃபைஸர் முஸ்தபா ஆகியோர் சொந்தச் செலவில் சவூதி சென்று சட்டத் தலையீடுகளை மேற்கொள்ளச் சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிவராசா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்துள்ளதால், இந்த வழக்கு தொடர்பான அனைத்துச் சட்டச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் விஜித ஹேரத், இந்நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையிலோ அல்லது இருநாடுகளுக்கு இடையிலான உறவைச் சீர்குலைக்கும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.


