மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை – உலகிலேயே முதல்முறை நிகழ்ந்த அற்புதம்!

0
3

மனிதர்களுக்கு அளிக்கப்படும் புற்றுநோய் சிகிச்சையின் மூலம், உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், ‘ஜோடி ஃபோஸ்டர்’ எனப் பெயரிடப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவருந்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனையில், அதன் தாடை எலும்பில் ‘ஃபைப்ரோசார்கோமா’என்ற புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டாலும், மீண்டும் அப்புற்றுநோய் தோன்றி தாடை எலும்பைச் சேதப்படுத்தத் தொடங்கியது.

இதனால் பாம்பைக் காப்பாற்ற, செஸ்டர் உயிரியல் பூங்கா மருத்துவர்கள் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘எலக்ட்ரோகீமோதெரபி’ சிகிச்சையை அந்தப் பாம்பிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வழங்கினர்.

பாம்பின் அளவிற்கு ஏற்ற அறுவை சிகிச்சை மேஜை இல்லாததால், இரண்டு மேஜைகளை ஒன்றாக இணைத்து, வெப்பப் போர்வைகள் மூலம் பாம்பின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரித்து 90 நிமிடங்கள் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின் மீதமிருந்த புற்றுநோய் செல்களை அழிக்க எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மலைப்பாம்பு மிக விரைவாகக் குணமடைந்து தற்போது நலமாக உள்ளது.

உலகிலேயே ஒரு பாம்பிற்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here