மத்திய கலாசார நிதியம் உண்மையான நோக்கங்களை எட்டியுள்ளது – பிரதமர் ஹரிணி

0
13

மத்திய கலாசார நிதியத்தின் உண்மையான நோக்கங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், கல்லங்கொல்ல மூலமகா விகாரையின் பாதுகாப்புப் பணிகளுக்காக 18 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது மத்திய கலாசார நிதியத்தின் ஒதுக்கீடுகளிலிருந்து மட்டுமே என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து, ‘தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த உடுநுவர, வெளம்பொட, கல்லங்கொல்ல பொத்குல் மூலமகா விகாரையின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜூன் 19 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கல்லங்கொல்ல பொத்குல் மூலமகா விகாரையின் விகாராதிபதி சாஸ்திரவேதி அம்பன்பொல சரத நாயக்க தேரரின் ஆசீர்வாதத்துடன் விகாரையின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் – மத்திய கலாசார நிதியத்தின் உண்மையான நோக்கங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கல்லங்கொல்ல மூலமகா விகாரையின் பாதுகாப்புப் பணிகளுக்காக 18 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது மத்திய கலாசார நிதியத்தின் நிதியிலிருந்து மட்டுமே ஆகும். மத்திய கலாசார நிதியத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படாமல் முறையாகச் சேகரிக்கப்பட்டால், பாரிய பணிகளைச் செய்ய முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அரசாங்கம் பணத்தைச் சேகரிப்பது திறைசேரியில் வைத்திருப்பதற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ அல்ல. மீண்டும் மக்களுக்கே நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே ஆகும். ‘தித்வா’ அனர்த்த இழப்புகளுக்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருக்கின்றது. 15,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் நாம் கடன்பெறாமலேயே மேற்கொண்டு வருகின்றோம்.

 

மேலும், ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நோக்கிய பயணத்தில், பொருளாதார அபிவிருத்தி மாத்திரமல்லாது, எமது பாரம்பரியங்கள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, எமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டுமாயின், அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். கல்லங்கொல்ல பொத்குல் மூலமகா விகாரையைப் பாதுகாப்பதன் மூலம் இப்பகுதி முழுவதுமே பாதுகாக்கப்படுவதோடு அபிவிருத்தியடைகிறது, என தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி,

‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களில் முக்கியமான ஏழு இடங்களைப் புனரமைப்பதற்காக மத்திய கலாசார நிதியத்தினால் 504 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் அதிகபட்சமாக 185 மில்லியன் ரூபா இந்த விகாரைக்காகவே ஒதுக்கப்பட்டதாகவும், இந்த அனைத்து நிதிகளும் மத்திய கலாசார நிதியத்தின் ஒதுக்கீடுகளே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ராமஞ்ஞ மகா நிக்காயவின் மத்திய மாகாண பிரதான சங்கநாயக்க, உடுநுவர நிக்ரோத கெத்த மகா பிரிவேனாவின் பரிவேணாதிபதி கொடமுன்னே பஞ்ஞாக்கித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here