இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர், பூட்டானில் நடைபெற்ற தென்னாசியக் காற்பந்து சம்மேளனத்தின் (SAFF) செயற்குழுவுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தென்னாசியக் காற்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஏழு தென்னாசிய உறுப்பு நாடுகளின் முழுமையான ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்று அவர் இப்பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.
இலங்கை காற்பந்து நிர்வாகப் பொறுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொண்ட ஜஸ்வர் உமர், நாட்டின் காற்பந்துத் துறையில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவரது திறம்பட வழிகாட்டலில், பிஃபா (FIFA) உலகத் தரவரிசையில் 207-வது இடத்தில் இருந்த இலங்கை காற்பந்து அணி, குறுகிய காலத்தில் 20 இடங்களுக்கும் மேல் முன்னேறி தற்போது 187-வது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை பெற்ற மிகச்சிறந்த உலகத் தரவரிசையாகும்.

சர்வதேச அளவிலான இச்சாதனைகளுக்கு அப்பால், இவரது நிர்வாகத்தின்கீழ் இலங்கை காற்பந்து சம்மேளனத்தில் நல்நிர்வாக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு, உள்நாட்டுப் போட்டிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இளையோர் மேம்பாடு மற்றும் அடித்தளக் காற்பந்து (Grassroots) பயிற்சிகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு, விளையாட்டின் நிலையான எதிர்காலத்திற்கான பல திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்புதிய நியமனம் சர்வதேச காற்பந்து நிர்வாகத்தில் இலங்கையின் வளர்ந்து வரும் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்னாசியக் காற்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜஸ்வர் உமர், ஏற்கனவே ‘பிஃபா’ அடித்தளக் காற்பந்து குழுவின் உறுப்பினராகவும், ஆசியக் காற்பந்து சம்மேளனத்தின் (AFC) மேம்பாட்டுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை காற்பந்து துறை மைதானத்திலும், நிர்வாக ரீதியிலும் ஒரு பொற்காலத்திற்குள் நுழைந்துள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தென்னாசியக் காற்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பல தசாப்தங்களுக்குப் பிறகு இலங்கை அணி பிராந்திய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரலாற்றுச் சாதனை படைத்துள்ள ஜஸ்வர் உமருக்கு இலங்கை காற்பந்து குடும்பத்தினரும், விளையாட்டு ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


