துபாய் பதுங்கியிருந்த இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குற்றவாளி ‘பஸ் லலித்’ கட்டுநாயக்கவில் கைது!

0
4

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு, துபாய்க்குத் தப்பிச் சென்று பதுங்கியிருந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் கண்ணங்கரகே லலித் கண்ணங்கர (36) என்ற சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சிறப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு, தூவ விகாரை வீதியைச் சேர்ந்த 36 வயதான இவர், ஆகஸ்ட் 25 அதிகாலை 05.20 மணியளவில் துபாயில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சந்தேகநபரான ‘பஸ் லலித்’ அல்லது ‘குடு லலித்’ என்பவர் ஹங்வெல்ல, அவிசாவளை, கடுகுருந்த, பாதுக்க, மீகொட மற்றும் கல்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல மனிதப் படுகொலைகள், போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் C-4 ரக அதிநவீன வெடிபொருட்களைத் தன்வசம் வைத்திருந்தமை போன்ற தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவராவார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here